சிவகங்கையில் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு


சிவகங்கையில் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 28 April 2020 11:00 PM GMT (Updated: 28 April 2020 9:23 PM GMT)

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை, 

கொரோனா வைரஸ் பரவலால் தடைசெய்யப்பட்ட திருப்பத்தூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறித்தும், திருப்புவனம் பகுதியில் மணல் கடத்தல் குறித்தும் 17 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமராவை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வசதியை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பாதித்த திருப்பத்தூர் நகர் பகுதியில் குறிப்பிட்ட வீதிகளில் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வெளியில் யாரும் செல்லாத வண்ணம் கேமரா மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. இதையொட்டி புதுத் தெருவில் 2 இடத்திலும், அச்சுக்கட்டு, திருக்கோளக்குடி பகுதியில் தலா ஒரு இடத்திலும் என 4 இடங்களில் 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இணையதள வாயிலாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தடைசெய்யப்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்றால் இங்கிருந்தே கண்டறிந்து உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும், பூவந்தி மற்றும் மணலூர் தேசிய நெடுஞ்சாலையில் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் வருகை குறித்து கலெக்டர் அலுவலகத்திலிருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு பணி மட்டுமன்றி திருட்டுகள் நடைபெற்றால் எளிதாக கண்டறிந்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். சட்டம், ஒழுங்கு குறித்தும் கண்காணித்து உரிய பாதுகாப்பு மேற்கொள்ளமுடியும். எனவே தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லாமலும், அரசு விதிமுறைகளை முறையாக கடைபிடித்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நல்லமுறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story