அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்ல பொதுமக்கள் அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு


அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்ல பொதுமக்கள் அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 29 April 2020 3:28 AM IST (Updated: 29 April 2020 3:28 AM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்ல பொதுமக்கள் கட்டாயம் அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் 3 வண்ணங்களில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி சீட்டை கொண்டு வராத வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர்.

ஆய்வு

இதன்படி கடலூர் நகரில் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, டவுன்ஹால், சாவடி, இம்பீரியல் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதை நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

டவுன்ஹாலில் உள்ள சோதனை சாவடி வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அனுமதி சீட்டு உள்ளதா? என்று அவர்கள் விசாரித்தனர். அனுமதி சீட்டு இல்லாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை கண்காணித்த கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அனுமதி சீட்டு இல்லாமல் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து அவர்கள் சாவடி, திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சோதனை சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்பிறகு பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டை கலெக்டர் பார்வையிட்டு, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அபராதம்

பின்னர் இது பற்றி கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். முக கவசம் அணியாமல் வெளியே செல்லும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story