தாராவியை மிரட்டும் கொரோனா: ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று - 4 பேர் பலி
ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மும்பை தாராவியை மிரட்டி வருகிறது. ஒரே நாளில் 42 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர்.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு ஆட்கொல்லி கொரோனா மிரட்டி வருகிறது. கடந்த 1-ந் தேதி துணிக்கடைக்காரர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதை அடுத்து தாராவியில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரேநாளில் மட்டும் இங்கு 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் 33 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள். அதிகபட்சமாக 90 அடி சாலை பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்கள் சோசியல்நகர், மாட்டுங்கா லேபர் கேம்ப், குஞ்ச் குருவேநகர், ஆசாத் நகர், சஞ்சய்காந்தி நகர், பிலா பங்களா, முகுந்த்நகர், முஸ்லிம்நகர், கல்யாணவாடி, இந்திராநகர், நியூ முனிசிபல்சால், மார்கண்டேயா சொசைட்டி, தோபிகாட், ராஜூவ் காந்திநகர், 60 அடி ரோடு, கிராஸ்ரோடு, மொச்சி கல்லி, சதாப்திநகர், பி.வி. சால், ஆகாஸ்வாடி, உதய் சொசைட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள்.
ஒரே நாளில் 42 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்து உள்ளது.
4 பேர் பலி
இதேபோல தாராவியில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். இதில் 3 பேர் ஆண்கள். ஒருவர் பெண். இதன்மூலம் இங்கு நோய் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது.
தாராவியில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும், 4 பேர் பலியாகி இருப்பதும் இதுவே முதல் முறையாகும். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருவது அங்கு வசிக்கும் மக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story