போலீஸ் ஏட்டுக்கு கொரோனா: பெருங்குடியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எல்லையை மூட வேண்டும் - கலெக்டர் உத்தரவு


போலீஸ் ஏட்டுக்கு கொரோனா: பெருங்குடியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எல்லையை மூட வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 29 April 2020 6:09 AM IST (Updated: 29 April 2020 6:09 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் ஏட்டுக்கு கொரோனா உறுதியான நிலையில் பெருங்குடியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எல்லையை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை அருகே பெருங்குடியை சேர்ந்த போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையொட்டி ஏட்டு வசித்து வந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் 6 இடங்களில் தகரம் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் வினய் அந்த பகுதியை பார்வையிட்டார். அப்போது அவர் பெருங்குடி ஊராட்சியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எல்லை மூடப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

வெளி நபர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது. அதே போல உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லக் கூடாது. அதை கண்காணிக்கப்பட வேண்டும். வீதிகளில் வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். 3 நாட்கள் தொடர்ந்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கேட்பவர்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் மூலம் வாங்கி கொடுக்க வேண்டும். அதற்காக அனுமதி பெற்ற வாகனத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஒலிபெருக்கி மூலம் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சோப்பு கொண்டு கை கழுவுவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்றார்.

ஆய்வின்போது திருப்பரங்குன்றம் தாசில்தார் நாகராஜன், திருப்பரங்குன்றம் யூனியன் ஆணையாளர் ஆசிக், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், டாக்டர் சசிக்குமார், சுகாதார வட்டார மேற்பார்வையாளர் தங்கச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் பத்மா முருகேசன், ஊராட்சி செயலர் அழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி சுமார் 1 மணி நேரத்தில் பெருங்குடியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடுப்புகள் போடப்பட்டது. மேலும் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story