ஊட்டியில் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை


ஊட்டியில் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 29 April 2020 7:59 AM IST (Updated: 29 April 2020 7:59 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு, அங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள போலீசாரில் 33 சதவீத போலீசாருக்கு இம்மாத தொடக்க முதல் ஒரு வாரம் ஓய்வுக்காக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து போலீசாருக்கும் சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வார விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சத்து மாத்திரைகள்

அதன்படி 292 போலீசார் விடுமுறை முடிந்து இன்று(புதன்கிழமை) பணிக்கு திரும்புகிறார்கள். அவர்களுக்கு ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தலைமை மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் நேற்று மருத்துவ பரிசோதனை நடந்தது. போலீசார் தனித்தனியாக மருத்துவ பரிசோதனைக்காக வந்தனர். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் புறநோயாளிகள் சீட்டு வழங்கப்பட்டு டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றனர்.

சளி, இருமல், தொண்டை வழி ஏதேனும் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் உடலில் பிரச்சினை இருக்கிறதா என்று டாக்டர்கள் கேட்டனர். ரத்த அழுத்தம் சரியாக உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தயாரிப்பதற்கான பொடி, வைட்டமின், ஜிங்க் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு எடுக்கப்பட்ட சளி மாதிரி பரிசோதனை முடிவில், தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

Next Story