வெள்ளரிவெள்ளியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் சாவு


வெள்ளரிவெள்ளியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் சாவு
x
தினத்தந்தி 29 April 2020 10:30 PM GMT (Updated: 29 April 2020 8:40 PM GMT)

எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் இறந்தார்.

எடப்பாடி, 

எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம். விவசாயி. இவருடைய மகன் லோகேஸ்வரன் (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

இதற்கிடையே எடப்பாடி அருகே பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழை, பாக்கு மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. பல பகுதிகளில் மின்வயர் அறுந்து மின்சாரம் தடைபட்டது.

இந்த நிலையில் நேற்று மாணவர் லோகேஸ்வரன் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்று பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மின்சார கம்பி அறுந்து அருகில் உள்ள வாழைமரத்தில் தொங்கி கொண்டிருந்தது.

இதை கவனிக்காத மாணவர் வாழைமரத்தை பிடித்தார். அந்த நேரம் வாழைமரத்தில் தொங்கிய மின்கம்பி மாணவரின் கழுத்து பகுதியில் பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம்போட்டவாறு மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பெற்றோர் மற்றும் அருகில் வசிப்பவர்கள் மாணவரை மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு லோகேஸ்வரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story