சேலத்தில் 4 நாட்களுக்கு பிறகு மளிகை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


சேலத்தில் 4 நாட்களுக்கு பிறகு மளிகை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 30 April 2020 4:45 AM IST (Updated: 30 April 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 4 நாட்களுக்கு பிறகு மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் திருவிழா போல பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகரில் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இந்த நாட்களில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் என அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வரவில்லை. மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கை பொதுமக்கள் அனைவரும் நன்றாக கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுத்ததாக கலெக்டர் ராமன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முழு ஊரடங்கு உத்தரவு நேற்று முன்தினம் இரவுடன் முடிவுக்கு வந்ததால் நேற்று காலையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன.

குறிப்பாக சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட உழவர் சந்தைகளில் அதிகாலையிலேயே பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கினர். இதனால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலைகளிலும் மொபட், மோட்டார்சைக்கிள் மற்றும் கார்கள் வழக்கம்போல் சென்று வந்ததை காணமுடிந்தது. சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகள் வாங்க திரண்டனர். அம்மாபேட்டை மற்றும் தாதகாப்பட்டி உழவர் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் காய்கறி வாங்க அங்கு குவிந்தனர். இதனால் காலை 7 மணிக்கெல்லாம் அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்தன. அதன்பிறகு வந்த பொதுமக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

சேலம் பழைய பஸ் நிலைய உழவர் சந்தையில் மட்டும் 2 மணி நேரத்தில் ரூ.27 லட்சம் மதிப்பிலான 9 டன் காய்கறிகள் விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் சேலம் புதிய பஸ்நிலையம், அஸ்தம்பட்டி உழவர் சந்தைகளிலும் காலை 6.30 மணிக்கே அனைத்து காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்றும், கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அறிவுறுத்தி வந்தனர்.

அதேபோல் மாநகரின் பல்வேறு இடங்களில் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டிருந்த மளிகை மற்றும் இறைச்சி கடைகளும் நேற்று காலையில் திறக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க திரண்டனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், லீபஜார் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் ஒரேநேரத்தில் அதிக அளவில் திரண்டனர். இதனால் அனைத்து கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது.

ஒவ்வொரு கடைக்கு முன்பும் 20-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக செவ்வாய்பேட்டை பகுதியில் திருவிழா போல் மக்களின் கூட்டம் காணப்பட்டது. அதேசமயம் அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, சூரமங்கலம், பெரமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.800-க்கும், ஒரு கிலோ பிராய்லர் கோழி இறைச்சி ரூ.180-க்கும், ஒரு கிலோ நாட்டுக்கோழி இறைச்சி ரூ. 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 4 நாட்களாக அசைவம் சாப்பிடாமல் இருந்த பொதுமக்கள் நேற்று இறைச்சி கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை மற்றும் காய்கறி கடைகள் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கடைகள் காலை 10 மணிக்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story