முள்ளோடை நுழைவு வாயிலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு


முள்ளோடை நுழைவு வாயிலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
x
தினத்தந்தி 30 April 2020 9:32 AM IST (Updated: 30 April 2020 9:32 AM IST)
t-max-icont-min-icon

முள்ளோடை நுழைவு வாயிலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கண்காணிப்பை தீவிரப் படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பாகூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் புதுவையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வந்தால், இங்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே அவர்களை மாநில எல்லையில் தடுத்து நிறுத்தும் வகையில் முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, கனகசெட்டிக்குளம் ஆகிய நுழைவு வாயில்கள் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இந்த நிலையில் மதுபான கடத்தல் தடுப்பு சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், சட்டம்- ஒழுங்கு அதிகாரியாக தனது பணியை நேற்று மீண்டும் தொடங்கினார். அவர் முள்ளோடை நுழைவு வாயிலில் போலீசாரின் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து பல நாட்களாக பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் பேசினார். நோய் தொற்று பரவுவதில் இருந்து போலீசார் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது, கடலூரில் இருந்து புதுவைக்கு அவசியமின்றி நுழைய முயன்ற வாகனங்களை திருப்பி அனுப்பிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டரின் உரிய கடிதம் இல்லாத எந்தவொரு வாகனங்களையும் அனுமதிக்கக்கூடாது, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனை

மேலும் அங்கிருந்த மருத்துவக் குழுவினரிடம், புதுவைக்குள் வரும் அனைவரையும், உடல் வெப்ப நிலையை கண்டறியும் கருவி மூலம் கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், தனசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், ராஜன் மற்றும் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை போலீசார் வழிமறித்து, உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று சோதனை செய்தனர். ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

அனுமதி கடிதம், அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்கு செல்பவர்கள் மட்டும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story