சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிறப்பு கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று நோய் உடையவர்களுடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் வசிக்ககூடிய அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் அங்கு பொதுமக்களுக்கு தேவையான மளிகைப்பொருட்கள், காய்கறிகள், பால், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக 80-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை, ஆய்வு செய்வதற்காக பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நேற்று கொண்டலாம்பட்டி மண்டலத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருமி நாசினி தெளிப்பு பணிகள், கணக்கெடுக்கும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த குழுவினர், அங்குள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் குடியிருப்பு பகுதிகளிலேயே வாகனங்கள் மூலம் விற்பனை செய்வதை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் எனவும், பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதுமட்டுமின்றி தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி மிக கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரியா, உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story