தாராவியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா - பாதிப்பு 369 ஆக உயர்வு
தாராவியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதித்தவர்கள் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பை,
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பையில் உள்ள தாராவி குடிசைப்பகுதியை கடந்த ஒரு மாதமாக கொரோனா பாடாய்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி இங்கு 56 வயது துணிக்கடைக்காரர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
இதையடுத்து இங்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதில் நேற்று மட்டும் தாராவியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதில், அதிகபட்சமாக குஞ்ச் குருவே நகர், டோர்வாடாவில் தலா 3 பேருக்கும், 90 அடிசாலை, 60 அடி சாலை, இந்திராநகர், சாஸ்திரி நகர் ஆகிய இடங்களில் தலா 2 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் சிவ்சக்திநகர், ஆசாத்நகர், கல்யாணவாடி, பிலாபங்களா, கும்பர்வாடா, லேபர்கேம்ப், டிரான்சிஸ்ட் கேம்ப், பி.எம்.ஜி.பி. காலனி, சோசியல் நகர், சவுகாலேசால், முஸ்லிம்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவர்.
ஒரே நாளில் 25 பேர் பாதிக்கப்பட்டதால் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 369 ஆகி உள்ளது. இதுவரை இங்கு 18 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியின் பரப்பளவு சுமார் 2 சதுர கி.மீ. மட்டுமே. இங்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் அடர்த்தி மிகுந்த தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமெடுத்து இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story