மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு


மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 1 May 2020 4:30 AM IST (Updated: 1 May 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு காரணமாக மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாட தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள உளியூர், காந்தவயல் ஆகிய கிராமங்களுக்கு சென்றார். அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் உள்ள அரசு மரக்கிடங்கு அருகே உள்ள வனப்பகுதியில் வன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வளாகத்தில் உள்ள சந்தன மர தோட்டத்தை பார்வையிட்டதுடன், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து வெங்கடேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

காட்டுத்தீ

கோடைகாலத்தில் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டத்தில் 22 இடங்களில் தொடர்ந்து காட்டுத்தீ ஏற்படுவதாக கடந்த 10 ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை பட்டா நிலங்களில் மட்டும் காட்டுத்தீ ஏற்பட்டது. அதனையும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு வனப்பகுதிக்குள் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அடர்ந்த வனப்பகுதியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு 100 சதவீத பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த தண்ணீர் தொட்டிகள் வாரம் ஒருமுறை தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வனப்பகுதியில் வெளிநபர்கள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு செலுத்தி வருகின்றனர். மேலும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சிலர் வேலையின்றி தவிப்பதாலும், இறைச்சி கிடைக்காததாலும் காட்டு முயல்களை வேட்டையாட முயற்சி செய்கின்றனர். கோவை வனப்பகுதியில் காட்டு முயல் வேட்டையாடியதாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கு காரணமாக தண்ணீர் மாசுபாடு குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story