ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இல்லாமல் திண்டாடும் தின்பண்ட தயாரிப்பு தொழிலாளர்கள்


ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இல்லாமல் திண்டாடும் தின்பண்ட தயாரிப்பு தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 1 May 2020 9:27 AM IST (Updated: 1 May 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக சிப்ஸ், முறுக்கு, தட்டை, கடலைமிட்டாய் உள்ளிட்ட நொறுக்குத்தீனி விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் வாழ்வாதாரம் இல்லாமல் திண்டாடுவதாக தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

வேலூர்,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்காரணமாக ரெயில், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டு, மாவட்ட, மாநில எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன.

கொரோனா தொற்று ஒருவர் மூலம் மற்றவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், பால், மருந்து, காய்கறி, மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம் கேள்விக்குறி

ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், வாகனம் பழுது பார்ப்போர், பஞ்சு மிட்டாய், பொம்மை, ஐஸ் விற்பனை செய்வர்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாக காணப்படுகிறது. தினமும் சம்பாதித்தால்தான் அன்றைய பொழுதை கழிக்க முடியும் என்ற நிலையில் காணப்படும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து பிறரை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளனர். ரேஷன் கார்டு வைத்திருந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை அரசு நிவாரணமாக கொடுத்துள்ளது. அவற்றை வைத்து ஒருமாதம் சமாளிப்பது என்பது கடினமான ஒன்று என்பது பாமர மக்களின் கருத்தாகும்.

ஊரடங்கு காரணமாக பலர் தங்களின் அன்றாட வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் தொலைத்து உள்ளனர். சிப்ஸ், முறுக்கு, தட்டை, கடலை மிட்டாய், தேன்மிட்டாய், காரசேவ், மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களை வீட்டில் தயாரிக்கும் தொழிலாளர்களும் அடங்குவர். தற்போதைய வாழ்க்கை முறையில் நமது தினசரி உணவு வகைகளில் நொறுக்குத்தீனியும் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது.

நொறுக்குத்தீனி விற்பனை கடைகள் மூடல்

குறிப்பாக மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பலர் முறுக்கு, காரசேவ், தட்டை போன்றவை இல்லாமல் அவற்றை குடிப்பதில்லை. பெரியவர்களை விட சிறுவர்களே அதிகளவு நொறுக்குத்தீனிகள் சாப்பிட பிரியப்படுகிறார்கள். அதன்காரணமாக வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெற்றோர் குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களை கட்டாயம் வாங்கும் நிலைக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறாக பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனி விற்பனை கடைகள் ஊரடங்கால் வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளன. அதனால் அதனை தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் திண்டாடி வருகிறார்கள். இதுகுறித்து வேலூர் மாவட்ட தின்பண்ட வியாபாரிகள் சங்க தலைவர் ராமு கூறியதாவது:-

வாழ்வாதாரம் இல்லாமல் திண்டாட்டம்

வேலூர் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளில் வைத்து குடிசை தொழிலாக கடலை, தேன்மிட்டாய், சிறிய பிஸ்கெட்டுகள், தட்டை, முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரித்து வருகிறார்கள். வேலூர் நகரில் 200 குடும்பத்தினர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவற்றை தவிர 20-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் 5-க்கும் மேற்பட்ட தின்பண்ட தயாரிப்பு கூடங்களும் காணப்படுகின்றன. வீடுகள், தயாரிப்பு கூடங்களில் தயார் செய்யப்படும் பெரும்பாலான தின்பண்டங்கள் வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் காணப்படும் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் மொத்தமாக விற்பனை செய்யப்படும். அந்த கடைகளில் இருந்து மளிகை கடைக்காரர்கள், சில்லறை வியாபாரிகள் அவற்றை பெற்று செல்வார்கள். தின்பண்டங்கள் தயாரிக்கும் குடும்பத்தினர் ஒவ்வொரு கடையாக சென்று தின்பண்டங்களை விற்பனை செய்து கிடையாது.

தற்போது ஊரடங்கால் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள நொறுக்குத்தீனி விற்பனை கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் தின்பண்ட தயாரிப்பு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி திண்டாடி வருகிறார்கள். குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள கோவில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தின்பண்ட தயாரிப்பு கூடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், வேலையும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். பேக்கரி கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதி அளித்தது போன்று நொறுத்தீனி கடைகளையும் வாரத்தில் 2 நாட்களாவது திறக்க அனுமதி அளிக்க வேண்டும். வாழ்வாதாரம் இல்லாமல் திண்டாடும் தின்பண்டங்கள் தயாரிப்பு தொழிலாளர்களின் கஷ்டத்தை போக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story