திருப்பூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் தீ - பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
திருப்பூர் பிச்சம்பாளையம் அருகே அடுத்தடுத்த 4 கடைகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகியது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூரில் சிவாச்சலம் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் உள்ள 4 கடைகளை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். அங்குள்ள 2 கடைகளில் அமிர்தலிங்கம் என்பவர் பழைய பேப்பர், இரும்பு மற்றும் வேஸ்ட் குடோனும், சிவராஜ் என்பவர் கார் ஒர்க்ஷாப்பும், கந்தசாமி என்பவர் வெல்டிங் ஒர்க்ஷாப்பும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமிர்தலிங்கம் என்பவருக்கு சொந்தமான வேஸ்ட் குடோனில் இருந்து திடீரென கரும்புகை எழுந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்து அருகில் உள்ள 3 கடைகளுக்கும் பற்றியது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வணிக வளாகத்திற்குள் செல்ல சரியான வழி இல்லாததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்பட்டது. 2 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 4 கடைகளிலும் இருந்த பல லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story