மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா
மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உள்பட மேலும் 3 பேருக்கு நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
மதுரை,
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மதுரையில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 3 பேருமே பெண்கள்.
ஒருவர் மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணி. இவருக்கு கடந்த 29-ந்தேதி சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
மற்றொருவர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 64 வயது மூதாட்டி. இவருக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த மூதாட்டிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அடுத்ததாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 24 வயது பெண் டாக்டருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் கேரளாவை சேர்ந்தவர்.
எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு ஒரு வருட மேல் படிப்பையும் முடித்துவிட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள கொரோனா நோயாளிகளிடமிருந்து இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய 2 நர்சுகள் மற்றும் 2 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது டாக்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த 2 பேர் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர். மற்றொருவர் மேலூர் பகுதியை சேர்ந்தவர். இதன் மூலம் மதுரை ஆஸ்பத்திரியில் இருந்து குணமாகி வீட்டுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story