வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுகளில் பாதுகாக்கப்படும் மதுபாட்டில்களை அழித்துவிடலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுகளில் பாதுகாக்கப்படும் மதுபாட்டில் களை அழித்து விடலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் மதுபாட்டில்கள் திருடப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான மதுபாட்டில்கள் அந்தந்த கோர்ட்டின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு உட்பட்ட ஒரு பகுதியில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் அந்த கோர்ட்டின் பாதுகாப்பு அறையில் இருந்து திருடப்பட்டவை என தெரியவந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்தும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளின் சொத்து பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களை அழிப்பது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் நடராஜன், மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு கடிதம் அனுப்பினார்.
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:- ஊரடங்கு அமலில் உள்ள இந்த சமயத்தில் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள், மதுபாட்டில் திருட்டில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளின் சொத்து பாதுகாப்பு அறைகளில் உள்ள மதுபாட்டில்களை உரிய அதிகாரிகள் முன்பாக அழித்துவிட வேண்டும்.
வழக்கு விசாரணைக்கு தேவைப்படுபவற்றை மட்டும் வைத்துக்கொள்ளலாம். மதுபாட்டில்களை அழிக்கும் புகைப்படங்கள், வீடியோவை ஆதாரமாக வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story