அவசியமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் கலெக்டர் உத்தரவு


அவசியமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 2 May 2020 3:58 AM IST (Updated: 2 May 2020 3:58 AM IST)
t-max-icont-min-icon

அவசியமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை விழுப்புரம் மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைப்பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை ஊராட்சி, செஞ்சி அடுத்த மேல்பாப்பாம்பாடி மற்றும் மரக்காணம் ஊராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதை நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அனுமதிக்க வேண்டாம்

அப்போது உரிய அவசியமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை விழுப்புரம் மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். அதோடு முக கவசம் இன்றி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி தாசில்தார் கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செஞ்சி நீதிராஜ், திண்டிவனம் கனகேஸ்வரி, மருத்துவ அலுவலர் மலர்விழி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story