கண்மாய் தூர்வாரும் பணியை விவசாயிகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்
கிளங்காட்டூர் கண்மாய் தூர்வாரும் பணியை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள கிளங்காட்டூர் கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் மூலம் 300 ஏக்கர் பாசனம் வசதி பெற்று வருகிறது. நெல், கரும்பு, நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு விவசாயங்கள் நடந்து வந்த நிலையில் பருவ மழை பொய்த்ததால் கடந்த சில வருடங்களாக போதிய விளைச்சல் இல்லை. கண்மாயிலும் தண்ணீர் தேங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது.
மேலும் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறும் நான்கு மடைகளும் சேதமடைந்து விட்டதால், கண்மாய் ஆழமாகவும் மடை மேடாகவும் இருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். இந்தநிலையில் குடி மராமத்து திட்டத்தின் கீழ் கண்மாயில் உள்ள மடைகளை சீரமைத்து, கண்மாயை தூர்வாரும் பணி நடைபெற உள்ளது.
மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மடை கட்டும் பணி, கண்மாய் தூர் வாரும் பணியை அந்தந்த பகுதி விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து நாட்டார் கால்வாய் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கிளங்காட்டூர் கண்மாயில் நான்கு மடைகள் உள்ளன. 1980-ல் பெய்த மழையில் ஒரு மடை முற்றிலும் சேதமடைந்து விட்டது.
மற்ற மூன்று மடைகளில் ஒரு மடை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது. அது முறையாக கட்டப்படாததால் நான்கு ஆண்டுகளில் மடை சேதமடைந்து விட்டது. எனவே தற்போது குடிமராமத்து பணியின் கீழ் நடைபெறும் பணிகளை அந்தந்த கண்மாய் சார்ந்த விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story