கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் காய்த்து தொங்கும் பலாப்பழங்கள்


கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் காய்த்து தொங்கும் பலாப்பழங்கள்
x
தினத்தந்தி 2 May 2020 4:13 AM IST (Updated: 2 May 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் சீசன் தொடங்கியதால் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இங்கு கொய்யா, மாதுளை, பலா உள்ளிட்ட பழ வகைகள், கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, மிளகு, உள்ளிட்ட திரவிய பயிர்களும் உள்ளன.

அரசு தோட்டக்கலை பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. மே மாதம் தொடங்கும் சீசன் வருகிற ஜூன் மாதம் வரை நீடிக்கும். இங்குள்ள பலா மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து கொத்துக்கொத்தாக தொங்கிக் கொண்டு உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பலாப்பழங்களை பறிக்கும் பணியில் பண்ணை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விற்பனை

பலாப்பழ வாசனைக்கு இழுக்கப்பட்ட குரங்குகள் இங்கு அதிகமாக வந்துள்ளன. இந்த குரங்குகள் பழுத்த பலாப்பழங்களை சாப்பிடுகின்றன. இதனால் அந்த குரங்குகளை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பலாப்பண்ணையை பார்வையிட்டு பழங்களை வாங்கி செல்வார்கள்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் வருவது இல்லை. மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ளூர் வியாபாரிகள் மட்டும் பலாப் பழங்களை வாங்கி செல்கின்றனர். பலாப்பழ விற்பனையும் குறைந்து காணப்படுகின்றது. பலாப்பழம் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. ஊரடங்கு உத்தரவு தளர்ந்த பின்னர்தான் பண்ணை மீண்டும் திறக்கப்பட்டு பலாப்பழ விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story