சாமியார்கள் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் மராட்டிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சாமியார்கள் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் மராட்டிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 May 2020 4:47 AM IST (Updated: 2 May 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

சாமியார்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மராட்டிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கடக்சின்சாலே பகுதியில் கடந்த 16-ந் தேதி இரவு மும்பை காந்திவிலி பகுதியில் இருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு காரில் சென்ற 2 சாமியார்கள், அவர்களது டிரைவர் 100 பேர் கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டனர். சாமியார்களை கொள்ளையர்கள் என நினைத்து பொது மக்கள் இந்த பயங்கரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக போலீசார் 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சசாங் சேகர் ஜா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘பால்கர் சம்பவம் போலீசாரின் தோல்வியால் நடந்தது. இது திட்டமிட்ட தாக்குதல். இதில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது. 

எனவே இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை காணொலி காட்சி மூலம் நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் பால்கர் சம்பவம் தொடர்பாக மராட்டிய போலீசாரின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தனர்.

எனினும் இது தொடர்பாக விசாரணை அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மராட்டிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Next Story