கோவில்பட்டியில் கால்நடை ஆஸ்பத்திரி ஆய்வாளர் மர்ம சாவு - போலீசார் விசாரணை
கோவில்பட்டியில் கால்நடை ஆஸ்பத்திரி ஆய்வாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மில் மேல காலனியைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 52). இவர் கோவில்பட்டி அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரமா (50). இவர்களுக்கு தீபிகா (26), கரீஷ்மா (25) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். தீபிகாவுக்கு திருமணமாகி வெளிநாட்டில் கணவருடன் வசித்து வருகிறார். கரீஷ்மா, சென்னையில் உள்ள வங்கியில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ரமாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் நாராயணமூர்த்தி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டதால், மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் நாராயணமூர்த்தி வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி மற்றும் போலீசார் விரைந்து சென்று, நாராயணமூர்த்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு நாராயணமூர்த்தி படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கை நரம்புகளில் இருந்து ரத்தம் கசிந்து உறைந்து இருந்தது. அவரது உடலின் அருகில் ரத்த அழுத்த நோய்க்கான மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. இறந்த நாராயணமூர்த்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாராயணமூர்த்தி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலை செய்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே நாராயணமூர்த்தி எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். கோவில்பட்டியில் கால்நடை ஆஸ்பத்திரி ஆய்வாளர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story