விளைச்சல் இருந்தும் விலை இல்லை: மரத்திலேயே பழுக்கும் வாழைத்தார்கள் - விவசாயிகள் வேதனை


விளைச்சல் இருந்தும் விலை இல்லை: மரத்திலேயே பழுக்கும் வாழைத்தார்கள் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 2 May 2020 10:15 PM GMT (Updated: 2020-05-03T00:46:45+05:30)

தூத்துக்குடியில் வாழைத்தார்கள் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

தூத்துக்குடி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் விவசாய பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் விவசாய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஆனால், விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும் ஏற்படுகிற சிக்கல்கள் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக வாழை பயிரிட்ட விவசாயிகள் தாங்கள் செய்த முதலீட்டை கூட ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று பாசனத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வாழைத்தார் விளைச்சல் நன்றாக இருந்த போதிலும், விலை இல்லை. இதனால் வாழைத்தார்கள் வெட்டாமல் விடப்பட்டு உள்ளதால், மரத்திலேயே பழுத்து காணப்படுகின்றன.

அந்த வாழைப்பழங்களை காக்கை, குருவிகள் கொத்தி தின்று விட்டு செல்வதால், வாழைத்தார் முழுவதும் பிசின் வடிந்து வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த தார்கள் ஏலம் விடுவதற்கு ஏற்றது அல்ல என்பதால், அதனை மரத்திலேயே வெட்டாமல் விட்டு விடுகின்றனர். குலையன்கரிசல் பகுதியிலும் மரங்களில் வாழைத்தார்கள் வெட்டாமல் விடப்பட்டு உள்ளன. மேலும் வெட்டப்பட்ட வாழைத்தார்களும் அங்குள்ள ஏலக்கூடங்களில் விலை போகாமல் தேங்கி கிடக்கின்றன.

விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சராசரியாக நாளொன்றுக்கு 60 முதல் 70 லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு வாழைத்தார்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு அதிக வாடகை கொடுக்க வேண்டி இருப்பதாலும், வாழைத்தார்கள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாலும் வாழைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Next Story