தர்மபுரி மாவட்டத்தில் 3,246 பேருக்கு கொரோனா பரிசோதனை: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் 3,246 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி வருகிற மே மாதத்திற்குரிய அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது. மேலும் பிரதமரின் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பயனாளி ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் மூன்று மாதங்களுக்கு கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது.
இதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தர்மபுரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தகுதியான அளவு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் இன்று அத்தியாவசியப் பொருட்கள் பெறும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படும். டோக்கன் பெற்றுக் கொள்ளும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று சமூக விலகல் முறையை தவறாமல் கடைபிடித்து உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களை அழைத்து வரவும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 3,246 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அமைச்சர் பேசினார்.
இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, நலப்பணிகள் இணை இயக்குநர் ஸ்டீபன்ராஜ், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பூவதி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் இளங்கோவன், தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story