கொரோனா வைரசால் முதியவர் பாதிப்பு: நல்லூரில், சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர் நேரில் ஆய்வு
கொரோனா வைரசால் முதியவர் பாதிக்கப்பட்டதை முன்னிட்டு நல்லூர் கிராமத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நல்லூரில் முதியவர் ஒருவருக்கு கொரோனா இருந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. வெளி மாநிலம் சென்று வந்த அவரை மருத்துவ குழுவினர் கண்காணித்த போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நல்லூர் கிராமம் மற்றும் காவேரிப்பட்டணம் பேரூராட்சி சண்முக செட்டி தெரு ஆகிய பகுதிகளில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலரும், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருமான ஆர்.கிர்லோஸ்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் கிராம எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளையும், மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் மேற்கொண்ட தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் அதிகாரிகளிடம் பேசிய கிர்லோஸ்குமார், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் முக கவசங்கள் வழங்க வேண்டும். அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வீடு, வீடாக மருத்துவ குழுவினர் சென்று பொது மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். மேலும் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொற்று நோய் ஏற்பட்டுள்ள நபரின் உறவினர்களை கண்டறிந்து அவர்களையும் வீட்டில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கிராமத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராமத்தை சுற்றி 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து கண்காணிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் வேளாண்மை உற்பத்தி பொருட்களான தக்காளி, புளி, பால் உள்ளிட்ட பொருட்களை சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து காவேரிப்பட்டணம் பேரூராட்சி சண்முக செட்டி தெருவில் வசிக்கும் மக்கள் தங்களை முற்றிலுமாக தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க யாரும் வெளியே வர வேண்டாம். தேவையான பொருட்கள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதையும் அதிகாரி கிர்லோஸ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077, 04343 - 234444, 230044 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெரியசாமி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர்.கோவிந்தன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் தெய்வநாயகி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், வேப்பனப்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சரவணன், நாச்சிகுப்பம் மருத்துவ அலுவலர் டாக்டர் பூவிழி, கிருஷ்ணகிரி தாசில்தார் தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், வேடியப்பன், சுபாராணி, காவேரிப்பட்டணம் மருத்துவ அலுவலர் சோமசுந்தரம் மற்றும் களப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story