இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வான 86 பெண்களுக்கு இன்று முதல் பயிற்சி: சீருடை வாங்க கடை முன்பு திரண்டதால் பரபரப்பு


இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வான 86 பெண்களுக்கு இன்று முதல் பயிற்சி: சீருடை வாங்க கடை முன்பு திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 May 2020 10:45 PM GMT (Updated: 2020-05-03T03:06:05+05:30)

இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வான 86 பெண்களுக்கு இன்று முதல் பயிற்சி நடைபெற உள்ளதால், சீருடை வாங்க கடை முன்பு அவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள இரண்டாம்நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களை கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கான அடிப்படை பயிற்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. மாவட்டத்தில் தேர்வான 86 பெண்களுக்கு சேலத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் நடக்கிறது. மேலும் ஆண்களுக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் காவலர் சீருடை மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்களை சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளரை ஊரடங்கை மீறி பொருட்கள் விற்றதற்கு அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 86 பெண்களுக்கு இன்று முதல் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். பின்னர் விரைவில் அவர்கள் போலீசாருடன் இணைந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். கோவையில் பயிற்சி பெறும் வாலிபர்களும் பயிற்சி முடிந்து சேலம் வந்து போலீசாருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றனர்.

Next Story