சேலத்தில் பரபரப்பு: முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு ‘ஆணழகன்’ பட்டம்
சேலத்தில் முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவர்களுக்கு அஸ்தம்பட்டி போலீசார் ‘ஆணழகன்’ பட்டம் வழங்கி நூதன தண்டனை அளித்தனர். இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம்,
சேலம் மாநகரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் நபர்கள் மீது காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் அடுத்தடுத்து 7 பேர் முக கவசம் அணியாமல் வந்ததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம், முக கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு இருக்கிறது. ஆனால் அதை மீறி ஏன் வெளியே வந்தீர்கள்?, இதுகுறித்து, எச்சரிக்கை செய்யும் வகையில் உங்களுக்கு ஆணழகன் பட்டம் வழங்கப்பட உள்ளது என உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களுக்கு ‘ஆணழகன்’ என்று வாசகம் எழுதி அதை அவர்களது தோளில் அணிவித்து சிறிது நேரம் நிற்க வைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை அங்கு வந்தார்.
பின்னர் முக கவசம் அணியாமல் இருந்தவர்களை அவர் எச்சரிக்கை செய்ததோடு, அவர்கள் அனைவருக்கும் போலீசார் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டு வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கினார். மேலும் அவர் அஸ்தம்பட்டி சரக போலீசாருக்கும் முக கவசம், கையுறை போன்றவற்றை வழங்கினார்.
இதுகுறித்து போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு ஆணழகன் என்ற பட்டம் வழங்கி நூதன முறையில் எச்சரிக்கை செய்து வருகிறோம். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு கிடையாது. இதன் பிறகாவது, பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக தான் இது போன்ற நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் எவ்வளவு விபரீதம் ஏற்படும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களையும், உங்களது குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டுமென்றால் தயவுசெய்து ஊரடங்கு உத்தரவு முடியும்வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும், என்றார். இச் சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story