முதல்-அமைச்சர் அறிவிப்பு எதிரொலி : பனியன் நிறுவனங்களை இயக்குவது குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆலோசனை


முதல்-அமைச்சர் அறிவிப்பு எதிரொலி : பனியன் நிறுவனங்களை இயக்குவது குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆலோசனை
x
தினத்தந்தி 4 May 2020 4:45 AM IST (Updated: 3 May 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கியதை தொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் பனியன் நிறுவனங்களை இயக்குவது குறித்து நேற்று முன்தினம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

திருப்பூர், 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசுக்கு பலர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் பல நாடுகளில் இந்த வைரசை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவிலும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற மே 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே ஊரடங்கு இருந்ததால், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் பல இயங்காமல் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். திருப்பூர் தொழில்துறையினரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சில வெளிநாடுகளில் இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து அங்குள்ள வர்த்தகர்கள் திருப்பூர் தொழில்துறையினருக்கு ஆர்டர்கள் வழங்க முடிவு செய்து, மாதிரி ஆடைகள் தயாரித்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் நிறுவனங்களை இயக்க முடியாத நிலையில் தொழில்துறையினர் அவதியடைந்தனர். 

இதனைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், குறைந்தபட்சம் தொழிலாளர்களை வைத்து நிறுவனங்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தையும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த கூட்டத்தின் ஜவுளி (பனியன்) நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிப்பதாகவும், அதற்கென சில கட்டுப்பாடுகளை விதித்து முதல்-அமைச்சர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதன் எதிரொலியாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களை இயக்குவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு ஆன்லைனில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இது குறித்து ஏற்றுமதியாளர்கள் கூறிய தாவது:-

தமிழக முதல்-அமைச்சர் பனியன் நிறுவனங் கள் இயங்க அனுமதி அளித்துள்ளார். மேலும், இந்த அறிவிப்பில் 50 சதவீத பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியில் உள்ள பகுதிகளில் அதாவது, ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நிறுவனங்கள் (ஜவுளித்துறை உள்பட) செயல்பட அனுமதி வழங்கப்படும். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை என்றும், நகர பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் கலெக்டர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் ஆன்லைனில் (இணையதள ஆப்) நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். 

இதில் தொழில்துறையினர் சிரமம் இன்றி தொழிலாளர்களை பாதுகாப்பாக பணியமர்த்தவும், அரசுக்கு முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு நிறுவனங்களை இயக்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொழில்துறையினரின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கான அனுமதி கலெக்டர் வழங்கியவுடன் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story