உடுமலை பகுதியில் மாறுபட்ட பருவநிலையால் மாங்காய் மகசூல் குறைந்தது - விவசாயிகள் வேதனை


உடுமலை பகுதியில் மாறுபட்ட பருவநிலையால் மாங்காய் மகசூல் குறைந்தது - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 4 May 2020 4:15 AM IST (Updated: 3 May 2020 11:30 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் மாறுபட்ட பருவநிலையால் மாங்காய் சாகுபடி குறைந்தது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

போடிப்பட்டி,

உடுமலை பகுதிகளில் மா சாகுபடிக்கு உகந்த சூழல் நிலவுகிறது. இங்கு ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, பொன்னாலம்மன் சோலை, மானுப்பட்டி, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா சாகுபடி நடைபெறுகிறது. இங்கு அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த் போன்ற ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த பராமரிப்பில் அதிக மகசூல் தரக்கூடியது என்ற வகையில் பல விவசாயிகளின் விருப்பத்தேர்வாக மா சாகுபடி உள்ளது.

அதேநேரத்தில் வனப்பகுதியை ஒட்டிய சூழல் என்பதால் காட்டுப்பன்றிகள், யானை போன்றவற்றால் இடையூறுகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் தற்போது திடீர் மழை, பனி போன்றவற்றால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

உடுமலை பகுதியில் மா சாகுபடியில் ஆண்டுக்கு இருமுறை மகசூல் கிடைக்கிறது. பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரை மாம்பழ சீசனாகும். ஆனால் சீசனில்லாத பருவத்திலும் உடுமலை பகுதியில் மாம்பழம் கிடைக்கும். இதனால் நல்ல விலை கிடைக்கும். ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மகசூல் கிடைக்கிறது. அதிலும் நடப்பு ஆண்டில் மாமரங்கள் பூ பூக்கும் நேரத்தில் மழை பெய்தது. இதனால் பூக்கள் பெருமளவு உதிர்ந்து மகசூல் குறைந்துள்ளது. மேலும் மாவுப்பூச்சிகள் தாக்குதலும் மகசூல் இழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

அத்துடன் இந்த பகுதியில் விளையும் மாம்பழங்களை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து மாம்பழ சாறு, பழக்கூழ், ஊறுகாய் உள்ளிட்ட மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்புக்காக அனுப்பி வைப்பார்கள். இதுதவிர திண்டுக்கல் சந்தைக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படும். தற்போது கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான போக்குவரத்து முடங்கியுள்ளது. 

இதனால் மாம்பழங்களுக்கு போதிய விலையும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர். இதனால் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story