வெளி மாவட்டங்கள்-மாநிலங்களுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


வெளி மாவட்டங்கள்-மாநிலங்களுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 May 2020 12:00 AM GMT (Updated: 3 May 2020 7:25 PM GMT)

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்ல ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

கோவிட்-19 தடை உத்தரவின் காரணமாக பொதுமக்கள் மாவட்டத்துக்குள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள www.tne-pass.tne-ga.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். இணையதள வசதி இல்லாதவர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். வெளிமாவட்டம் செல்ல அனுமதி கோருபவர்களுக்கு மாநில அனுமதி சீட்டு குழுவினரால் அனுமதி வழங்கப்படும். மாவட்டத்துக்குள் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே மாவட்ட கலெக்டர் மூலமாக அனுமதி வழங்கப்படும்.

தனிநபர்கள் ஈரோடு மாவட்டத்துக்குள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்ய அனுமதிச்சீட்டு பெறுவதற்கு திருமணம், மரணம், மருத்துவ உதவி ஆகிய 3 காரணங்களுக்காக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு முன்பு திருமணம் உறுதி செய்யப்பட்டு இருத்தல், மிகவும் நெருங்கிய உறவினர்களாக இருந்தால் மட்டுமே அனுமதிச்சீட்டு வழங்க பரிசீலிக்கப்படும். அப்போது திருமண அழைப்பிதழ் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மரணம் அடைந்தவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மிகவும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இறந்ததற்கான மருத்துவ சான்று அல்லது இறப்பு நடந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரியின் சான்று அல்லது இறப்பு சான்று கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். அவசர மருத்துவ உதவிக்கு சமீபத்திய மருத்துவ சான்று இணைக்கப்பட வேண்டும். நோயாளியுடன் ஒரு உதவியாளர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும்போது தங்களது செல்போன் எண்ணுக்கு பெறப்பட்ட ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) உள்ளடு செய்ய வேண்டும். மேலும், கட்டாயமாக இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து பதிவு செய்ய வேண்டும். தங்களது விண்ணப்பம் பதிவானதை உறுதி செய்ய ஒப்புதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். உரிய அதிகாரிகளால் விண்ணப்பம் பரிசீலனை செய்து, ஏற்பு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். பிறகு செல்போன் எண்ணை பயன்படுத்தி தங்களது அனுமதிச்சீட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நேரில் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்துக்கு செல்ல விரும்புபவர்கள் rtos.no-n-r-es-i-d-e-ntt-a-m-il.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பிற மாநிலங்களில் தங்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் தற்போது சொந்த மாநிலம் திரும்ப rttn.no-n-r-es-i-d-e-ntt-a-m-il.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியுள்ளார்.

Next Story