சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கொரோனா நோய்த்தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு சிறப்பு அலுவலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது வால்டாக்ஸ் சாலை பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முக கவசங்கள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர், சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
அந்த வகையில் வி.ஆர்.பிள்ளை தெரு, புளியந்தோப்பு பகுதி தட்டான்குளம், கோயம்பேடு மார்க்கெட், மோதிலால் தெரு போன்ற அதிக கொரோனா தொற்று உள்ள பகுதிகளை ஆய்வு செய்தோம். இங்கு ஆய்வு மேற்கொண்டதில் பொதுமக்கள் முறையாக முககவசங்கள் அணிவதில்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பொதுமக்கள் ஊரடங்கையும் முறையாக கடைப்பிடிப்பதில்லை.
என்-95 முககவசம் தான் அணிய வேண்டும் என்பது இல்லை. முகத்தை துணியை வைத்து மூடினால் போதும். பொதுமக்கள் சளி, காய்ச்சல் போன்ற சாதாரண அறிகுறிகள் இருந்தால் கூட பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவமனைகளிலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் ‘டெலிவரி பாய்ஸ்’, தன்னார்வலர்கள் போன்றவர்களும் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் தன்னார்வலர் ஒருவர் மூலம் 51 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிகளவில் முடிவுகள் வருவதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். மளிகை கடைக்கு மக்கள் செல்லாமல், தொலைபேசியில் தொடர்பு கொண்டால், வீட்டுக்கே மளிகை பொருட்கள் கொண்டுவர மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளோம்.
கொரோனா தடுப்பு பணியில் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. குடிசைப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை பின்பற்றி வீட்டிலேயே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story