குன்னூரில் நிவாரண தொகை கேட்டு போராட்டத்தில் குதித்த லாரி டிரைவர்கள்


குன்னூரில் நிவாரண தொகை கேட்டு போராட்டத்தில் குதித்த லாரி டிரைவர்கள்
x
தினத்தந்தி 3 May 2020 11:08 PM GMT (Updated: 3 May 2020 11:08 PM GMT)

குன்னூரில் கொரோனா நிவாரண தொகை கேட்டு லாரி டிரைவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 751 வாடகை லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரிகள் தேயிலைத்தூள், பச்சை தேயிலை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வது, அங்கிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வருவது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசு அனுமதி பெற்று 150 லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட எல்லைகளில் லாரி டிரைவர்களை சோதனைக்கு உட்படுத்துவதால், அவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வந்தால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக கொரோனா நிவாரண தொகை கேட்டு குன்னூரில் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து குன்னூர் லாரி ஓட்டுனர் சங்க தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-

மருத்துவ பரிசோதனை

ஊரடங்கில் இருந்து விதிவிலக்கு பெற்று அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வர குன்னூரில் இருந்து 150 லாரிகளில் டிரைவர்கள் சென்னை, புதுச்சேரி, கர்நாடகா போன்ற இடங்களுக்கு சென்று வருகிறோம். வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது, ஆங்காங்கே லாரிகள் நிறுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு சென்று வரும் போது மாவட்ட எல்லைகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு சென்று வரும் டிரைவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இதனால் வருமான இன்றி தவிக்கும் நிலை உள்ளது. எங்களது குடும்பத்தினரை காக்க அரசு நிவாரண தொகை வழங்கவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் நிவாரண தொகை அறிவிக்கும் வரை லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story