மதுரையில் திடீர் சாலை மறியல்


மதுரையில் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 May 2020 5:15 AM IST (Updated: 4 May 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கிரைம் பிராஞ்ச் அருகே உள்ள காஜிமார் தெரு உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை, 

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வெளியே வராமலும், அந்த பகுதிகளுக்குள் வேறு நபர்கள் உள்ளே செல்லாமலும் இருக்கும் வண்ணம் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை கிரைம் பிராஞ்ச் அருகே உள்ள காஜிமார் தெரு உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை திடீரென்று வீட்டை விட்டு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச் பகுதி சாலையில் மறியல் செய்து கோஷம் எழுப்பினர். 

அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு இல்லை. மேலும் 14 நாட்கள் கடந்த நிலையில் எங்களின் வாழ்வாதாரம் முடங்கியதோடு போதிய உதவிகள் கிடைக்கவில்லை. எனவே எங்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மறியல் பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story