நிவாரண தொகை வழங்கக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
நிவாரண தொகை வழங்கக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
கமுதி,
பரமக்குடி கோட்டத்தில் உள்ள பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 250 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கட்டிடம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 2 மாதத்திற்கு தலா ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. புயல், மழை, சூறாவளி உள்பட பேரிடர் காலங்களில் மின் பழுதுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ளதால் உணவிற்கு கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கமுதி அருகே கோட்டைமேடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். சுமார் 1½ மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. இதனை தொடர்ந்து மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணியை சந்திப்பதாக முடிவு எடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பரமக்குடி கோட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் மாரி கூறும்போது, வர்தா, ஒக்கி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் தினமும் ரூ.350 கூலியும், சிறப்பாக பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படுவதாக மின்வாரியத்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால் தொழிலாளர்களுக்கு இதுவரையில் கூலியும் வழங்கப்படவில்லை, பாராட்டு விழாவும் நடத்தவில்லை. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
Related Tags :
Next Story