வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களுக்கு செல்ல வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாகன அனுமதி சீட்டு வழங்கப்படாது


வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களுக்கு செல்ல வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாகன அனுமதி சீட்டு வழங்கப்படாது
x
தினத்தந்தி 4 May 2020 4:29 AM GMT (Updated: 4 May 2020 4:29 AM GMT)

வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களுக்கு செல்ல வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாகன அனுமதி சீட்டு அனுமதிக்கப்படாது. இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்காரணமாக ரெயில், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட, மாநில எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. திருமணம், மருத்துவ அவசரம், இறப்பு போன்ற தவிர்க்க முடியாத பயணங்களுக்காக மட்டும் அந்தந்த கலெக்டர் அலுவலத்தில் வாகன அனுமதி சீட்டு பெற்று செல்லாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பலர் வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களுக்கு வாகன அனுமதி சீட்டு பெற்று சென்றனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த பிறமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக பிறமாநிலத்துடன் பேசி உரிய அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அனுமதி சீட்டு வழங்கப்படாது

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூரில் சிகிச்சைக்காக வந்து விடுதி, திருமண மண்டபங்களில் தங்கியிருக்கும் 100-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் வாகன அனுமதி சீட்டு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். அவர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், பிற மாநில நிர்வாகத்திடம் அனுமதி பெறும் பணி நடைபெறுவதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பல வடமாநிலத்தவர்கள் வாகன அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்துக்கு தந்தனர்.

இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாகன அனுமதி சீட்டு பெறுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் ஊரடங்கு வருகிற 17-ந் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களுக்கு செல்ல வாகன அனுமதி சீட்டு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்படாது. https://tne-ga.org/#/user/pass என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து அனுமதி சீட்டை ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story