புளியங்குடியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா - நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


புளியங்குடியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா - நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 5 May 2020 4:45 AM IST (Updated: 5 May 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் புதிதாக 7 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

புளியங்குடி, 

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த ஊருக்குள் செல்லும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன.

மேலும் நகரில் நவீன எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியும், தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புளியங்குடி நகரசபை ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் தினந்தோறும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 9 பேருக்கு பாதிப்பு

புளியங்குடியில் நேற்று முன்தினம் வரை நோய் தொற்றால் 37 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புளியங்குடியில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட பரிசோதனையில், 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர்.

இதன்மூலம் புளியங்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 49 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் ஏற்கனவே 11 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புளியங்குடியை சேர்ந்த ஒருவர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். மீதமுள்ள 37 பேரும் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 57 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்ற 6 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் பத்தமடையை சேர்ந்த ஒருவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். மற்ற 5 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நேற்றுடன் சேர்த்து கடந்த 11 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டதால், அந்த மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது. அங்கு 16-வது நாளாக நேற்றும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

Next Story