ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக கருதி கடைகளில் அலைமோதிய கூட்டம்
ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக கருதி சிவகாசி பகுதியில் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
சிவகாசி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்டமாக சில கட்டுப்பாடுகளுடன் வருகிற 17-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சிவகாசி நகர் பகுதியில் பல கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதனால் காலை 10 மணிக்கு நகரின் முக்கிய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதையடுத்து போலீசார், விருதுநகர் மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் தான் உள்ளது. மாவட்ட நிர்வாகமும் கடை திறக்க அனுமதி அளிக்கவில்லை. எனவே ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மட்டும் மதியம் 1 மணி வரை திறக்கலாம் என்று மைக் மூலம் அறிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டிற்கு திரும்பினர். பல இடங்களில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ரதவீதியில் உள்ள கடைகளுக்கு வந்ததால் அந்தபகுதிக்கு வரும் முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். இதனை தொடர்ந்து நகர் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் வத்திராயிருப்பு பகுதியில் சலூன்கடை, டீக்கடை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. மேலும் கூமாப்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு வங்கியில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு சமூக விலகலை கடைபிடிக்காத மக்களுக்கு அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story