மாவட்டத்தை மிரட்டும் கொரோனா: ஊரடங்கு தளர்வில் கடைகளை திறக்க வியாபாரிகள் குழப்பம்


மாவட்டத்தை மிரட்டும் கொரோனா: ஊரடங்கு தளர்வில் கடைகளை திறக்க வியாபாரிகள் குழப்பம்
x
தினத்தந்தி 5 May 2020 3:19 AM IST (Updated: 5 May 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தை கொரோனா மிரட்டி வரும் நிலையில் ஊரடங்கு தளர்வில் கடைகளை திறக்க முறையான அறிவிப்புகள் இல்லாததால், வியாபாரிகள் குழப்பமடைந்துள்ளனர். அதோடு மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பாதிப்புகள் என்பது மேலும் அதிகரிக்கும் அபாய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மாதம்(ஏப்ரல்) 3-ந்தேதியன்று முதல் முதலாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 19-ந்தேதியன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்தது. பின்னர் ஒரு வாரமாக புதிய தொற்று இல்லை. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டால் கடலூர் மாவட்டம் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது.

இதுவரை மக்களுக்கு காய்கறிகளை வினியோகம் செய்துவந்த கோயம்பேடு மார்க்கெட், தற்போது கொரோனாவையும் சேர்த்து வினியோகம் செய்து வருவதுதான் அதிர்ச்சியை தந்துள்ளது. ஏனெனில் கோயம்பேட்டில் வேலைசெய்தவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியிருந்த நிலையில் அவர்களுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2-வது இடம்

அதன்படி கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, மாவட்டமும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி மிரட்டி வருகிறது. இதனால் தமிழக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 20-வது இடத்தில் இருந்து வந்த கடலூர் மாவட்டம் நேற்று 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

ஆனால் 3-வது ஊரடங்கு அமலுக்கு வந்த, முதல் நாளான நேற்று கடலூர் மாவட்டத்தில், தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு மளமளவென உயர்ந்து விட்டது.

வியாபாரிகள் குழப்பம்

அவ்வாறு இருக்கும் நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் கடைகள் திறக்கும் முனைப்பில் பல வியாபாரிகள் ஈடுபட்டனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதால், கடையை திறக்கலாமா? வேண்டாமா? என்று வாசலில் பலர் காத்திருந்தனர். 10 மணிக்கு பின்னர் வழக்கம் போல் கடைகளை வியாபாரிகள் திறந்தனர். கடலூர் நகரில் மெக்கானிக் கடை, செல்போன் ரீசார்ஜ் கடைகள், எலக்ட்ரிக்கல் கடை, பிளம்பர், பேன்சி கடை, நோட்டு, புத்தக கடை உள்பட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் டீக்கடைகளும் திறந்திருந்தன. ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன. ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறக்கலாம். அதுவும் பார்சல் மட்டுமே வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சில ஓட்டல்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் கடைகள் திறப்பது தொடர்பாக முறையாக நெறிமுறைகள் தெரிவிக்கவில்லை என்று வியாபாரிகள் சிலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

அதாவது, கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால் மாவட்டத்தில் பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கட்டுப்பாடு உள்ள பகுதிகள் எவை? இது மாவட்டம் முழுவதற்கும் பொருந்துமா? என்று தெளிவான முடிவு இல்லாமல் இருக்கிறது. இது வியாபாரிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வங்கிகளில் கூட்டம்

அதேபோல் 40 நாட்களாக வீட்டுக்குள் முடங்கிய மக்களும் நேற்று வெளியே நடமாட தொடங்கினார்கள். இதனால் வெறிச்சோடிய சாலைகள் அனைத்தும் போக்கு வரத்து மிகுந்து காணப்பட்டது. இதன் மூலம் ஊரடங்கு அமலில் இருக்கிறதா? இல்லையா? என்கிற சந்தேகம் மேலோங்க தோன்றியது.

அதாவது இத்தனை நாட்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து இருந்த நிலையில் ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருந்தனர். ஆனால் பாதிப்புகள் உயர்ந்து வரும் சூழலில், பேராபத்துகளை உணராமல் மக்களும் அங்கும், இங்குமாக சென்று வந்தனர். இது சமூக பரவலாகி விடுமோ என்கிற அச்சத்தை உண்டாக்குவதாக இருந்தது.

ஊரடங்கு காலத்தில் 3 வித வண்ண அட்டைகள் வழங்கப்பட்டு இருந்தது. அந்த அட்டைகளை யாரும் பயன்படுத்த வில்லை. மாறாக நகர பகுதிகளில் போலீசார் எந்த கெடுபிடியும் விதிக்கவில்லை. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் ஜன்தன் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்திய தொகையை எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சில வங்கிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் பணத்தை எடுத்து சென்றதை காண முடிந்தது.

இனி வரும் நாட்கள் சவாலானது

தளர்வுகள் என்பது அத்தியாவசிய தேவைகளுக்கானதாக இருக்க வேண்டும். அதற்கு அப்பாற்பட்டு இருந்தால் பாதிப்புகள் மேலோங்கும். வீட்டுக்குள் முடங்கிய மக்கள் வெளியே வருவதற்கும் இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், சிலரது அலட்சியம் இத்தனை நாட்களாக கொரோனாவை எதிர்த்து போராடி வரும் போராளிகள், மெனக்கெடும் அதிகாரிகள் என்று அனைவரது உழைப்பும் சுக்குநூறாக உடைந்து விடும். எனவே கொரோனா சங்கிலி தொடரை உடைக்க இனிவரும் நாட்கள் தான் கடலூர் மாவட்ட மக்களுக்கு சவாலானதாகும். ஆகவே மக்கள் கவனமுடன் கடந்து சென்றால் மட்டுமே கொரோனாவை விரட்டியடிக்க முடியும்.


Next Story