எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: காய்ச்சல் இருக்கும் மாணவர்களுக்கு தனி அறை - அதிகாரிகளுக்கு மந்திரி சுரேஷ்குமார் உத்தரவு
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அவர்களுக்கு தனி அறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அனைத்து மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அதிகாரிகள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தங்களுக்கு எப்போது தேர்வு நடைபெறும் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று கூறினர். இந்த கூட்டத்தில் மந்திரி சுரேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-
கொரோனாவுக்கு பிறகு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்படும். இதற்காக சமூக விலகல் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். முக கவசம் அணிவது, சானிடைசர் திரவம், காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.
மருத்துவ வசதிகள்
ஒருவேளை காய்ச்சல் இருந்தால், அத்தகைய மாணவர்களுக்கு தனி அறையை ஏற்பாடு செய்து தேர்வை எழுத வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், மாணவர்களை தரையிலோ அல்லது வெட்டவெளியிலோ அமர வைத்து தேர்வை எழுத பணிக்கக்கூடாது. தேவையான அளவுக்கு மேசைகள், இருக்கை வசதிகளை ஏற்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை, பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். தேர்வு அறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். துணை தேர்வு மையங்களை அமைக்க வேண்டும். கண் காணிப்பு கேமராக்கள், மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகள் தேர்வு மையங்களை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு வகுப்புகள்
சந்தனா அரசு தொலைக் காட்சியில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆங்கில வழி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. மாணவர்கள் பலர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றிருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்திலேயே தேர்வு நடத்த ஒரு செயல் திட்டத்தை அதிகாரிகள் தயாரிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.
இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை கமிஷனர் ஜெகதீஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story