ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் மக்கள் குவிந்தனர்: போக்குவரத்து நெரிசலால் தேனி ஸ்தம்பித்தது


ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் மக்கள் குவிந்தனர்: போக்குவரத்து நெரிசலால் தேனி ஸ்தம்பித்தது
x
தினத்தந்தி 4 May 2020 11:52 PM GMT (Updated: 2020-05-05T05:22:25+05:30)

ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் தேனி நகரில் மக்கள் குவிந்தனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தேனி நகர் ஸ்தம்பித்தது.

தேனி,

கொரோனா பாதிப்பை அடிப்படையாக வைத்து மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தேனி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அதே நேரத்தில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங் களில் ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் அளிக்கப்படவில்லை.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய 6 நகரங்களிலும் ஊரடங்கு தளர்வு அளிக்கப்படவில்லை. ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகள் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வராத பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு இருந்தது.

மக்கள் குவிந்தனர்

தேனி நகரில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்படாத நிலையில், மக்களிடம் ஏற்பட்ட தவறான புரிதலால் கடைகள் திறந்து இருக்கும் என்று நினைத்து தேனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் மக்கள் படையெடுத்தனர். இதனால், தேனி நகரில் நேற்று காலை 8 மணியில் இருந்தே வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டது. கார்கள், இருசக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தேனிக்கு வந்தனர்.

இதனால் தேனி நகரில் கம்பம் சாலை, மதுரை சாலை ஆகிய பிரதான சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. காலை 10 மணியளவில் நெரிசல் மேலும் அதிகரித்தது. தேனி நேரு சிலை சிக்னலில் இருந்து கம்பம் சாலையில் பழனிசெட்டிபட்டி வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதுபோல் மதுரை சாலையிலும் அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக தேனி நகர் ஸ்தம்பித்தது.

ஒழுங்குபடுத்தும் பணி

நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். மாற்றுப் பாதைகளில் வாகனங்களை பிரித்து அனுப்பிய போதிலும் பிரதான சாலைகளில் நெரிசல் அதிகரித்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பழனிசெட்டிபட்டியில் இருந்து தேனிக்கு நுழையும் பகுதியில் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். ஊரடங்கு தளர்வு இல்லை என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவித்த வண்ணம் இருந்தனர். மக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால், தேனி நகரில் காலையில் இருந்து பிற்பகல் வரை பரபரப்பாக காணப்பட்டது.

இதேபோல் ஆண்டிப்பட்டி நகரில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அரசின் அறிவுரையை மக்கள் யாரும் பின்பற்றாமல் இருந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டன.


Next Story