திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புள்ள இடங்களை பொறுத்து சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. திருப்பூரில் 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். சிலர் உணவுக்கு கூட வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு வீதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி நேற்று மாலை அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பலருக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், பல்வேறு அரசியல் கட்சிகள் திருப்பூரின் அனைத்து பகுதி மக்களுக்கும் உதவி செய்து வரும் நிலையில் தங்கள் பகுதிக்கு பெரிய அளவில் உதவ முன்வரவில்லை என்று கூறி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதையடுத்து போலீசார் அவர்களை சமரசப்படுத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story