கடைகளில் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை நாராயணசாமி எச்சரிக்கை


கடைகளில் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 May 2020 12:36 AM GMT (Updated: 2020-05-05T06:06:07+05:30)

கடைகளில் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் கடைகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி முக்கிய வீதிகளில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்களும், கடைக்காரர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடைகளை திறக்க அனுமதி

புதுவை அமைச்சரவையில் முடிவு செய்து கடைகளை திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அரசின் முடிவை கவனிக்காமல் போலீசார் சிலர் கடைகளை மூடச்சொன்னதாக எனக்கு புகார்கள் வந்தது. அதை தொடர்ந்து கலெக்டரை தொடர்பு கொண்டு பேசி கடைகளை திறக்க அனுமதிக்குமாறு உத்தரவிட்டேன்.

கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நானும் சில கடைகளை நேரில் சென்று பார்வையிட்டேன். அப்போது விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை தொடர்புகொண்டு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி உள்ளேன்.

கடுமையான விதிமுறைகள்

கடலூர், விழுப்புரத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து குறுக்குவழியில் வருபவர்களையும் தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது. இது நமக்கு சவாலாக உள்ளது. தொடர்ந்து கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது பற்றி ஆலோசித்து முடிவு எடுப்போம். மக்கள் கடுமையான விதிமுறைகளை போட்டால்தான் கடைபிடிக்கிறார்கள். நான் கடைகளுக்கு ஆய்வுக்கு சென்று வந்தபின் மனதுக்கு மிகவும் உறுத்தலாக உள்ளது. மக்களின் நடவடிக்கை அரசுக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. அவர்களுடன் தொடர்புடைய 70 பேருக்கு சோதனை நடத்த உமிழ்நீர் எடுத்துள்ளோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல கையில் பணம் இன்றி தவிக்கின்றனர். அவர்கள் ரெயிலில் இலவச பயணம் மேற்கொள்ள பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அது மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கு சென்ற யாத்திரிகர்கள், மாணவ-மாணவிகள் சொந்த ஊர் திரும்ப பேரிடர் நிவாரண நிதியை அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story