சார்பனாமேட்டில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்


சார்பனாமேட்டில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 May 2020 1:11 AM GMT (Updated: 2020-05-05T06:41:34+05:30)

சார்பனாமேட்டில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்.

வேலூர்,

வேலூர் சார்பனாமேட்டில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதி மாநகராட்சி குழாய்களில் சிறிதுநேரம் மட்டுமே குடிநீர் வந்துள்ளது. பல வீடுகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கக்கோரி சார்பனாமேட்டில் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், “இப்பகுதிக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story