கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களுக்கு வாலாஜா மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் தயார்


கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களுக்கு வாலாஜா மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் தயார்
x
தினத்தந்தி 5 May 2020 4:38 AM GMT (Updated: 5 May 2020 4:38 AM GMT)

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் வாலாஜா அரசு மருத்துவமனையில் தற்போது 500 படுக்கை வசதிகள் தயாராக உள்ளது என கலெக்டர் கூறினார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 40 பேர். தற்போது புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 3 பேரும் சென்னை கோயம்பேடு சென்று வந்தவர்கள் ஆவர்.

வாலாஜா அரசு மருத்துவமனையில் தற்போது 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தேவைப்பட்டால் 4 ஆயிரம் படுக்கைகள் வரை அமைப்பதற்கு ஏற்ற இடவசதி, கட்டில் வசதி தயார் நிலையில் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்துக்கு வந்த 10 பேர் இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கட்டுமான பணிக்கு அரசு அனுமதி

அரசு உத்தரவின்படி நேற்று முதல் கடைகளை திறக்கலாம். 6-ந்தேதி முதல் தோல், டெக்ஸ்டைல் போன்ற தொழிற்சாலைகள் திறப்பது குறித்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான பணிகளுக்கும் அனுமதி இல்லை.

அரக்கோணத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அங்கு தற்போதைய கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும். கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களை தங்க வைத்து பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர்களை தங்க வைக்க போதுமான வசதி இல்லை எனில், வாகனப் போக்குவரத்து ஏற்பாடு செய்து தொழிலாளர்களை அழைத்துச் சென்று வர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதனிடையே அரக்கோணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேர் வசிக்கும் பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகளுக்கு உதவி கலெக்டர் பேபிஇந்திரா, தாசில்தார் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் ராஜவிஜயகாமராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார் சென்று ஸ்டிக்கர் ஓட்டி தனிமைப்படுத்தினர். அந்தந்தத் தெருக்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story