கோவில்பட்டி அருகே, லாரிகள் மோதல்; டிரைவர் பலி - மற்றொருவர் படுகாயம்


கோவில்பட்டி அருகே, லாரிகள் மோதல்; டிரைவர் பலி - மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 5 May 2020 10:45 PM GMT (Updated: 2020-05-05T23:19:58+05:30)

கோவில்பட்டி அருகே லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கோவில்பட்டி, 

ஈரோட்டில் இருந்து நெல்லை சிமெண்டு ஆலைக்கு தேவையான பாறைத்தூள் லோடு ஏற்றிய லாரி புறப்பட்டு சென்றது. அந்த லாரியை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சங்கையூரைச் சேர்ந்த குருசாமி மகன் சத்யராஜ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.

இதேபோன்று சென்னையில் இருந்து மெழுகு லோடு ஏற்றிய லாரி மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எட்டூரைச் சேர்ந்த செந்தில் (36) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் சந்திப்பு மேம்பாலத்தில் 2 லாரிகளும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது முன்னால் சென்ற மெழுகு லோடு ஏற்றிய லாரி மீது பாறைத்தூள் லோடு ஏற்றிய லாரி பயங்கரமாக மோதியது.

டிரைவர் சாவு

இந்த விபத்தில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர் சத்யராஜ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீசார் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சத்யராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த செந்திலை கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story