சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி திருப்பூரில் திரண்ட வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் பிச்சம்பாளையம்புதூரில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி சமூக இடைவெளி இன்றி வடமாநில வாலிபர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
டாலர் சிட்டி என்றழைக்கப்படும் திருப்பூரில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக திருப்பூருக்கு வடமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தை சேர்ந்த வெளிமாவட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.
ஆனால் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு ரெயில் வசதி இல்லாததால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரிலேயே சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் வேலைக்கு செல்லாததால் போதிய வருமானம் இல்லாமலும், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் பிச்சம்பாளையம்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திரண்டனர். அவர்கள் சமூக இடைவெளி இன்றி குவிந்து இருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து தொழிலாளர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் இந்த தகவல் அறிந்ததும் பிச்சம்பாளையம், போயம்பாளையம், ஸ்ரீநகர், அங்கேரிபாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆதார் அட்டை நகல்களுடன் அங்கு வரத் தொடங்கினர். இதன்படி அங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,500 பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு கூறியதாவது:-
திருப்பூரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இங்கு சிக்கி உள்ள தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல அந்தந்த மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதன்படி பீகார் மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளவர்களின் பெயர், விவரங்களை அந்த மாநில இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். மற்ற மாநில அரசுகள் தொழிலாளர்களின் செல்போன் எண்களுக்கு ஓ.டி.பி. அனுப்பி விண்ணப்பிக்கும் வகையில் இணையதளத்தை தயார் செய்திருப்பதால் அந்த மாநில தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் தாங்களே விண்ணப்பிக்க முடியம். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வரும் நிலையில் வடமாநில தொழிலாளர்கள் 300 பேர் ஒரே இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story