விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்களை ஏரியில் கொட்டிய விவசாயிகள்: பொதுமக்கள் மூட்டைகளில் அள்ளி சென்றனர்


விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்களை ஏரியில் கொட்டிய விவசாயிகள்: பொதுமக்கள் மூட்டைகளில் அள்ளி சென்றனர்
x
தினத்தந்தி 5 May 2020 11:15 PM GMT (Updated: 2020-05-06T01:55:00+05:30)

அரூரில் விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்களை விவசாயிகள் டிராக்டர்களில் ஏற்றி வந்து ஏரியில் கொட்டினர். அவற்றை பொதுமக்கள் மூட்டைகளில் அள்ளி சென்றனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த சித்தேரி, வள்ளிமதுரை ஆகிய பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நாட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் கத்தரிக்காய்கள் அறுவடை செய்து சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் விளைந்த கத்தரிக்காய்களை வெளியூர்களுக்கு எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இருந்தபோதிலும் அறுவடை செய்த கத்தரிக்காய்கள் உள்ளிட்ட காய்கறிகளை அரூர் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக எடுத்து செல்கிறார்கள். இந்த நிலையில் நாட்டு கத்தரிக்காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விலை வீழ்ச்சியால் மனவேதனை அடைந்த சில விவசாயிகள் கத்தரிக்காய்களை மூட்டையாக கட்டி டிராக்டரில் ஏற்றி சென்று அரூரில் உள்ள பெரிய ஏரியில் கொட்டினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் அருகே வசிக்கும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் வந்து ஏரியில் கொட்டப்பட்ட கத்தரிக்காய்களை மூட்டைகளில் அள்ளி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஏரியில் கத்தரிக்காய்களை கொட்டிய விவசாயிகள் கூறியதாவது:-

நாட்டு கத்தரிக்காய் சாகுபடிக்கு பராமரிப்பு செலவு, அறுவடை பணி உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இதற்கு உரிய விலை கிடைக்கவில்லை. வியாபாரிகள் மிகக்குறைந்த விலைக்கு கேட்கிறார்கள். விலை வீழ்ச்சி காரணமாக கத்தரிக்காய்களை ஏரியில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

இந்த பகுதியில் கத்தரிக்காய் சாகுபடி செய்த விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் சில லட்ச ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் விளையும் நாட்டு கத்தரிக்காய்களை வெளிமார்க்கெட்டிற்கு எடுத்து சென்று விற்பனை செய்வதற்கும், உரிய விலை கிடைக்கவும் வாகன வசதி ஏற்படுத்தி தரவேண்டும். தற்போது இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story