கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்


கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 May 2020 3:08 AM IST (Updated: 6 May 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென அமைச்சர் எம் சி சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, சிதம்பரம் சப்-கலெக்டர் விசு மகாஜன், விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன் குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் தெய்வபக்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எம்.சி. சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

68 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 203 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர சென்னைக்கு சென்று வந்தவர்கள் பணிநிமித்தம் காரணமாக பிற மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன் வந்து பரிசோதனை மேற்கொண்டு அவர்களும், அவர்களை சார்ந்த குடும்பத்தினரையும் காக்கும் வகையில் தனித்திருந்து நோய்த்தொற்று பரவாமல் மக்களை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்ற சமூக நோக்கில் செயல்பட வேண்டும்.

பச்சை மண்டலத்துக்கு வர ஒத்துழைப்பு

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க கிராம அளவில் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சத்தான உணவுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் சத்தான சரிவிகித உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வைட்டமின் சி நிறைந்த பழச்சாறு கபசுர குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 14 நாட்களில் மாவட்டத்தில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற பெயரோடு கடலூர் மாவட்டம் பச்சை மண்டலத்துக்குள் வர மாவட்ட மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story