கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில்131பேருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில்131பேருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 May 2020 9:44 PM GMT (Updated: 2020-05-06T03:14:45+05:30)

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வேகமெடுக்கும் தொற்றால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

கடலூர்,

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாட்டினரும் திணறி வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கை

தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் அடியெடுத்து வைத்த கொரோனா பாதிப்பு கடந்த 30-ந்தேதி வரை 28 நபராக இருந்தது. இவர்கள் அனைவரும் பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

பேரதிர்ச்சி

இவர்களில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 26 பேர், பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் கடலூர் மாவட்ட மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 903 பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதில் 699 பேரை வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கண்டறிந்து விருத்தாசலம், வேப்பூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து உமிழ்நீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் வந்தபோது கடலூர் மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது கடந்த 3-ந்தேதி வரை 53 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் கோயம்பேட்டில் இருந்து திரும்பிய 108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 161 ஆக இருந்தது.

மேலும் 68 பேர்

இந்த நிலையில் நேற்று காலையிலும் பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த மேலும் 68 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் நல்லூர், மங்களூர் ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை கண்டறிந்த சுகாதாரத்துறையினர் அவர்கள் வசிக்கும் பகுதியை தடுப்புக்கட்டை அமைத்து சீல் வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அடங்க மறுக்கும் இந்த கொரோனாவால் கடலூர் மாவட்ட மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

விழுப்புரம்

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்களால் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 134 பேரில் 85 பேர் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

தொடர்ந்து, கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், செஞ்சி, அரசூர், கப்பியாம்புலியூர் ஆகிய இடங்களில் உள்ள 4 மையங்களில் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

25 பேர் பாதிப்பு

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது. இவர்களில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் செஞ்சி தாலுகா ஆனத்தூரில் ஒரு பெண் உள்பட 2 பேரும், கொணலூரில் ஒரு பெண்ணும், தென்புத்தூரில் 4 பேரும், மேல்தணியாலம்பட்டில் ஒரு பெண் உள்பட 2 பேரும், விக்கிரவாண்டி தாலுகா தும்பூரில் 5 பேரும், கஸ்பாகாரணையில் 2 பேரும், விழுப்புரம் தாலுகா வேடம்பட்டில் 4 பேரும், திண்டிவனம் தாலுகா கோனேரிக்குப்பம், கிளியனூர், நல்லாவூர் ஆகிய கிராமங்களில் தலா ஒருவரும், வானூர் தாலுகா புளிச்சப்பள்ளத்தில் ஒருவரும், விழுப்புரம் டெலிகாம்நகரில் ஒரு பெண்ணும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

159 ஆக உயர்ந்தது

இதையடுத்து பாதிக்கப்பட்ட 25 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 110 பேர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

கிராமங்களுக்கு சீல் வைப்பு

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேர் வசிக்கும் கிராமங்களை தடை செய்யப்பட்ட கிராமங்களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த கிராமங்களில் இருக்கும் மக்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கும் வகையிலும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அந்த கிராமங்களுக்குள் நுழையாமல் இருக்கும் வகையிலும் மேற்கண்ட கிராமங்களின் பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 3 பேர் குணமடைந்து அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அங்கு இருந்த திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் 162 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திரும்பி வந்தனர். மேலும் இவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் சிலரது பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கணக்கெடுக்கும் பணி

இதையடுத்து 38 பேரும் உளுந்தூர்பேட்டை அருகே குமாரமங்கலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல்சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டும் கள்ளக்குறிச்சி அல்லது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த 38 பேரையும் சேர்த்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதித்த 38 பேரின் சொந்த ஊர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியே வராதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் யாருக்காவது காய்ச்சல், இருமல் உள்ளதா? என கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story