புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1,700 படுக்கைகளுடன் தயாராகும் கொரோனா நோயாளி நலவாழ்வு மையம்


புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1,700 படுக்கைகளுடன் தயாராகும் கொரோனா நோயாளி நலவாழ்வு மையம்
x
தினத்தந்தி 6 May 2020 4:24 AM IST (Updated: 6 May 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புளியந்தோப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1,700 படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளி நலவாழ்வு மையம் தயாராகி வருகிறது.

சென்னை, 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகம் முழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காண்பித்து வருகிறது. இந்தியாவிலும், அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. அதுவும் நீண்ட நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த வேண்டியுள்ளது.

இதனால் சென்னை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் மற்றும் கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு என தனிப்பிரிவுகள் தொடங்கப்பட்டு நோயாளிகள் அங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு சில ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளி வார்டுகள் நிரம்பி வழிவதால், கொரோனா தாக்கத்தில் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் (அதாவது அறிகுறிகள் இல்லாமல் நோய் தொற்று உடையவர்கள்) அரும்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரி, வேப்பேரி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகம் மற்றும் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

புளியந்தோப்பில் 1,728 தனிமை படுக்கைகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் தனிமைப்படுத்துவதற்கு வசதியாக ரெயில் பெட்டிகளையும் தனிமை படுக்கை வசதி கொண்டதாக மாற்றி வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 532 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா நோயாளி நலவாழ்வு மையம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்காக சென்னை புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் குடிசைமாற்று வாரியத்தால் புதிதாக கட்டப்பட்டுள்ள கேசவன் பூங்கா குடியிருப்பில் 1,728 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் பிரமாண்டமான அளவில் கொரோனா நோயாளி நலவாழ்வு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு ஒரு தளத்துக்கு 28 அறைகள் கொண்ட 9 பிளாக் குகளில் முதல் 3 அடுக்குகளில் மட்டும் அந்த அறைகள் 2 ஆக பிரிக்கப்பட்டு 1,512 தனிமை படுக்கைகள், ஒரு தளத்துக்கு 12 சிறிய அறைகள் கொண்ட 9 பிளாக்குகளில் முதல் 3 அடுக்கு களில் தலா 1 படுக்கை வீதம் 216 தனிமை படுக்கைகள் என மொத்தம் 1,728 தனிமை படுக்கைகள் ஏற்படுத்தப்படுகிறது.

Next Story