கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் ஒத்திவைப்பு? - மந்திரி ஈசுவரப்பா பேட்டி


கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் ஒத்திவைப்பு? - மந்திரி ஈசுவரப்பா பேட்டி
x
தினத்தந்தி 5 May 2020 11:49 PM GMT (Updated: 2020-05-06T05:19:22+05:30)

கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலை ஒத்திவைக்க கோரி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் இதையொட்டி அவற்றுக்கு நிர்வாக அதிகாரியை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

பெங்களூரு, 

பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-


கிராம பஞ்சாயத்துகளுக்கு நடப்பு மாதத்தில் தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலை ஒத்திவைக்க கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். பதவி காலம் முடிந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டுமா? அல்லது நிர்வாக அதிகார குழுவை நியமிக்க வேண்டுமா? என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராம பஞ்சாயத்துகளுக்கு நிர்வாக அதிகாரியை நியமிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.

கொரோனா கட்டுக்குள்...

இங்கு விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மந்திரிசபையில் முதல்-மந்திரியிடம் தெரிவிக்கப்படும். அங்கு இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். மதுபான விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று சொன்னவரே சித்தராமையா. இப்போது அந்த கடைகளை திறந்த பிறகு, மதுபான கடைகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டியுள்ளதாக குறை சொல்கிறார்.

குடிகாரர்களிடம் விதிமுறைகளை பின்பற்றுங்கள் என்று சொன்னால் அதை தவறாமல் பின்பற்றுவார்களா?. குடிகாரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சித்தராமையா தலைமையில் ஒரு குழு அமைத்தால் நன்றாக இருக்கும். அரசு என்ன செய்ய வேண்டும் என்று சித்தராமையா ஆலோசனை வழங்கட்டும். நாட்டிலேயே கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கர்நாடக அரசை மக்கள் பாராட்டுகிறார்கள்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

Next Story