வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6,157 பேர் கைது 5,397 வாகனங்கள் பறிமுதல்


வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6,157 பேர் கைது 5,397 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 May 2020 8:45 AM IST (Updated: 6 May 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6,157 பேர் கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5,397 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கின்போது பொதுமக்கள் பால், காய்கறி, மளிகைப்பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்லும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பலர் இதனை பின்பற்றாமல் மோட்டார் சைக்கிள், கார்களில் சுற்றித்திரிகிறார்கள். ஊரடங்கை மீறும் நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் முதற்கட்ட ஊரடங்கான மார்ச் 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை அரசின் உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 879 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 292 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

6,157 பேர் கைது

கொரோனா தொற்று அதிகரித்ததால் 2-ம் கட்டமாக ஏப்ரல் 15-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அதே கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பை உணராத பலர் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரடங்கு உத்தரவை மீறிய 3,104 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட 2,947 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 3-ம் கட்டமாக நேற்று முன்தினம் முதல் வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 174 பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 158 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 25-ந் தேதி முதல் நேற்று முதினம் வரை ஊரடங்கை மீறியதாக 5,777 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் 6,157 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் சொந்த ஜாமீனில் அனுப்பப்பட்டனர். அவர்களிடமிருந்து 5,397 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசின் உத்தரவை மீறிய 614 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story